ஆலய அமைப்பு...
வெட்டவெளியில் குடிகொண்டிருக்கும் இறைவன் ஆலயம் வடபுறம் குளக்கரையும், தென்புறம் ஏரிக்கரையும் கொண்டு கிழக்குமுகம் வாசல் கொண்டு அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகப்பெருமானும் அருட்காட்சி தருகின்றனர்.
ஆலயத்தின் உள்ளே வெட்டவெளியில் சித்தம் கலங்கி பித்துப் பிடித்து உலகை வலம் வந்து பின் ஒருநிலையாய் அருள்நிலையாய் திருநிலையாய் நின்று சுயம்பு உருவில் அருள்பாலிக்கிறார் பெரியாண்டவர். சுயம்பு லிங்கத்திறகு மேற்புறம் இடதுபக்கம் பரமசிவனாக அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் அகிலத்தைக் காத்திடும் அகிலாண்டேஸ்வரியாக அன்னை பார்வதி காட்சி அளிக்கின்றார்.
பெரியாண்டவர் தோற்றத்துடன் காட்சி
சுயம்பு லிங்கத்தின் மேற்புறம் மனித உருவில் உலகை வலம் வந்த, மானிடம் காக்க வந்த முதற் கடவுளாக, அருள் தருவதில் முன்னிற்கும் மூர்த்தியாக, பக்தர்களைக் காத்திட ஒருநிலையாய் திருநிலையில் நின்று பெரியாண்டவராக காட்சி தருகின்றார்.
அங்காள பரமேஸ்வரி
சுயம்புவின் வலதுபுறம் உலகை வலம் வந்த சிவபெருமானை ஒருநிலையில் சூலாயுதத்தால் நிறுத்திய, அகங்காரம் நீக்கி அன்புதனை புகுத்திடும் அன்னையாக, அடியவர்களின் துயரை விரைவில் நீக்கிடும் வடிவாம்பிகையாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்பு பொங்க அருட்காட்சி தருகின்றார். அங்காள பரமேஸ்வரிக்கு நேர் எதிர்திசையில் சிவனும் சக்தியும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் உருவில் அமர்ந்து காடசி தருகின்றனர்.
மற்ற மூர்த்திகள்
ஆலயத்தில் தட்சினாமூர்த்தி கோபுரத்தின் தெற்கு திசையில் அமைந்துள்ளார். பைரவர் கோபுரத்தின் வட திசையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். சிவனும் சக்தியும் கால் பதித்து ஓருசேர நின்ற இவ்விடத்தில் சிவபாதமும், சக்தி பாதமும் தனித்தனியாக காட்சி தருவது தரிசிப்பவர் பாவத்தை போக்கவல்ல கண்கொள்ளா காட்சியாகும்.
சிவகணங்கள்
சுயம்பு லிங்கத்தைச் சுற்றி செவ்வக வடிவில் 21 சிவகணங்கள் இறைவனை வணங்கி நின்று காட்சி தரும் கோலம் வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும். மேலும் சிவன் மனித ரூபத்தில் உலகை பெரியாண்டவராக அவதாரம் எடுத்து வலம் வந்தபோது, நந்தி பகவானும் அவ்வாறே கோலம் கொண்டு வலம் வந்து இறைவனின் முன்னால் மனித ரூபத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அரிய காட்சியை இங்கு காண முடியும்.
சித்தாமிர்த தீர்த்தம்
ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் சகலமும் கிட்டும் என்பது இறை அன்பர்களின் நம்பிக்கை.
No comments:
Post a Comment