திருக்கோவிலில் நடைபெறும் பூஜைகள் ...
சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.
சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உரு கொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் சிவகணங்கள் அருள் பெற 21 மண் உருண்டைகள் பிடித்து, சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து, ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து, கற்பூர ஆராதனை காட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு பெளர்ணமி தினத்தில் மாலைப் பொழுதில் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனை, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. பூஜை முடிந்தவுடன் அன்னதானமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை வேளையில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மஹாசிவராத்திரி விழக்களும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
திருக்கோவிலில் செய்யும் விசேஷ பூஜை முறைகள் ...
மஞ்சளால் பிள்ளையார் பிடித்து அருகம்புல், புஷ்பம் வைத்து தேங்காய் உடைத்து கற்பூர ஆராதனை காட்ட வேண்டும். பின்பு மூன்று கலசங்கள் வைத்து (சித்தாமிர்த தீர்த்தம்) நீர் அதில் ஊற்றி ஏலக்காய், லவங்கம், பச்சைக்கற்பூரம், எலுமிச்சம்பழம் குடத்தில் விட்டு மாவிலை வைத்து அதன்மேல் மட்டை தேங்காய் வைக்க வேண்டும்.
முதல் கலசத்தில் பிள்ளையார் துண்டு மாலை அணிவித்து ஆவாகனம் செய்ய வேண்டும்.
2வது கலசத்தில் மாவிலை, மட்டை தேங்காய் வைத்து வேப்பிலையால் கரகம் செய்து, உச்சியில் எலுமிச்சம்பழம் செருகி கதம்ப மலரால் கரகத்தை அலங்கரித்து கலர் துணி போட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியாக ஆவாகனம் செய்ய வேண்டும்.
3வது கலசத்தில் மாவிலை, மட்டை தேங்காய் வைத்து மாலை அணிவித்து வெள்ளைத்துண்டு அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்ய வேண்டும்.
3 குத்துவிளக்குகளை எடுத்துக் கொண்டு அலங்காரம் செய்து ஒருமுகமாக திரி போட வேண்டும்.
முதல் குத்துவிளக்கில் மஞ்சள் துண்டு அணிவித்து மாலை அணிவித்து ஸ்ரீ துர்க்காதேவியாக ஆவாகனம் செய்ய வேண்டும்.
2வது குத்துவிளக்கில் சிவப்பு துண்டு அணிவித்து மாலை அணிவித்து ஸ்ரீ பார்வதியாக ஆவாகனம் செய்ய வேண்டும்.
3வது குத்துவிளக்கில் வெள்ளை துண்டு அணிவித்து மாலை அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்ய வேண்டும்.
ஆலயத்தின் முன் பகுதியில் குத்து விளக்கினால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ துர்க்கா தேவியை ஆவாகனம் செய்து, ஆலயத்தின் உள் மற்றும் வெளிப் பிரகாரத்தில் மஞ்சள் நீரால் தெளித்து துர்க்கா தேவிக்கு கற்பூர ஆராதனை செய்து துஷ்டதேவதைகள் உள்ளே வராமல் துணை நிற்குமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். பின் வெண் பூசணியை நான்காக வெட்டி மஞ்சள் குங்குமம் தடவி ஆலயத்தின் உள் பிரகாரம் நான்கு மூலைகளிலும் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும். பின்பு விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு சுயம்பு லிங்கத்திற்கு அருகில் இடது பக்கம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை வைக்க வேண்டும். அதன் பிறகு சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும். 21 சிவகணங்களுக்கும் (மண் உருவம்) அபிஷேகம் செய்யப்பட்டு, 21 வாழை இலை வைத்து பொங்கல், வெண் பொங்கல், வடை, பால் பாயசம், சுண்டல், வாழைப்பழம், வெற்றிலைபாக்கு, தேங்காய் உடைத்து வைத்து, மண் அகலில் விளக்கேற்றி ஒவ்வொரு சிவகணங்களுக்கும் ஒரே நேரத்தில் கற்பூர தீபம் ஏற்றி ஆராதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு பூஜை செய்வோருக்கு பெரியாண்டவர் சகல செளபாக்கியங்களும் வழங்குவார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.